ராணுவத்தை வைத்து அரசியல் செய்வதா?: மத்திய அரசுக்கு காங். கண்டனம்
6/29/2018 5:09:07 PM
புதுடெல்லி: இந்திய விமானப்படை முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகக் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துல்லியத்தாக்குதலை ராணுவத்தினர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்களை நமது ராணுவத்தினர் தாக்கி அழித்தனர். இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் என ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் அந்த துல்லியத் தாக்குதல் குறித்த வீடியோவை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கண்டித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:‘நமது ராணுவ வீரர்களின் துணிச்சல் மிக்க வீரம், தியாகம் ஆகியவற்றை மத்தியில் ஆளும் மோடி அரசு தங்களின் தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்தப்பார்க்கிறது. பாகிஸ்தானை எப்படி அணுகவேண்டும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாத செயல்களை எப்படிக் கட்டுப்படுத்துவது, அதற்கான வழி என்ன என்பதைக் கண்டுபிடிப்பதில் தோல்வி அடைந்துவிட்டது.
நமது துணிச்சல் மிக்க வீரர்கள் சிந்திய ரத்தமும், தியாகமும் அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்த கூடாது என்பது மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28,29-ம் தேதி நடத்தப்பட்ட துல்லியத்தாக்குதல்களை கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத் தேர்தலில் கூறி பாஜ அரசு வாக்குக் கேட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின் 146 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர், 1600 முறைக்கு மேல் எல்லைதாண்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது, 79 முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். மோடி அரசால் நமது பாதுகாப்பு கட்டமைப்புக்கு ஆபத்து இருக்கிறதா?, நமது வீரர்களின் வாழ்க்கையை மோடி அரசு ஆபத்தாக மாற்றி இருக்கிறதா, நமது வீரர்களின் தியாகத்தின் மூலம் அதைத் தனது அரசியல் லாபத்துக்கு மோடி அரசு பயன்படுத்துகிறதா என்ற கேள்விகள் எழுகிறது. இந்த துல்லியத் தாக்குதலை வீடியோ எடுத்ததன் மூலம், வீரர்களை உயிரை மட்டும் ஆபத்தில் சிக்கவைக்கவில்லை, எல்லைப்பகுதியில் வாழ்ந்த மக்களையும் மத்திய அரசு ஆபத்தில் சிக்க வைத்தது. இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.