நாங்கள் நினைத்திருந்தால் அதிமுக அரசை கலைத்திருப்போம்: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி
6/29/2018 5:08:09 PM
திருச்செந்தூர்: நாங்கள் நினைத்திருந்தால் தமிழகத்தில் அதிமுக அரசை 356வது பிரிவை பயன்படுத்தி கலைத்திருப்போம் என்று ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்கா திருச்செந்தூரில் கூறினார். மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ்சின்கா இன்று திருச்செந்தூர் வந்தார். அவருடன் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் வந்தார். இருவரும் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து திருச்செந்தூர் விருந்தினர் மாளிகைக்கு வந்த மத்திய அமைச்சர் மனோஜ்சின்கா அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 8 வழிச் சாலை அமைக்கும் பணிகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல மாநிலங்களில் நடக்கிறது. டில்லியில் 14 வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. நமது பகுதி வளர்ச்சிக்கு நாம் தான் இடம் கொடுக்க வேண்டும். வளர்ச்சி குறித்தும், விவசாயம் குறித்தும் தெரியாதவர்கள் பொதுமக்களை தூண்டி விடுகின்றனர்.
இப்படி தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு தமிழர்கள் ஆதரவு தருகின்றனர். எந்தக் கட்சியினரையும் கேள்வி கேட்கத் தயங்குகின்றனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும். அவர்கள் பெரும்பான்மையை இழந்து விழுந்து கிடக்கிறார்கள். நாங்கள் நினைத்திருந்தால் அதிமுக அரசை அரசியல் சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி கலைத்திருப்போம். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் அதிமுக பாஜவுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாகவும், தமிழகத்திலும் மோடி ஆட்சி தான் நடக்கிறது எனவும் அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இதற்கு தகுந்தவாறு தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யாரும் பாஜவை விமர்சித்துப் பேசுவது இல்லை. இந்நிலையில் மத்திய அமைச்சர் அதிமுக அரசை கலைத்திருப்போம் என கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.