தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியை விமர்சிப்பதா? தங்க தமிழ்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பெண் வக்கீல் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
6/29/2018 5:06:59 PM
சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தலைமை நீதிபதியின் தீர்ப்பையும், தலைமை நீதிபதியையும் விமர்சனம் செய்த விவகாரத்தில் தங்க தமிழ்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர பெண் வக்கீல் அட்வகேட் ஜெனரலிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவியிலிருந்து மாற்றக்கோரி டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 19 பேர் தமிழக ஆளுநரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து, 19 பேருக்கும் பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதில், எஸ்.டி.கே.ஜக்கையன் அரசுக்கு ஆதரவாக மாறினார். இதையடுத்து, வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி எம்.சுந்தர், பேரவைத் தலைவரின் முடிவு சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தார். மாறுபட்ட தீர்ப்பால் வழக்கின் முடிவை எட்ட 3வது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிகளில் விமர்சனம் செய்தார். தீர்ப்பு வாங்கப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி குறித்து நேரடியாக விமர்சனம் செய்துள்ள அவர் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதியை விமர்சனம் செய்த தங்கத்தமிழ் செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற பதிவகத்தில் வக்கீல் ஸ்ரீமதி புகார் மனு தாக்கல் செய்தார். கிரிமினல் நடவடிக்கை என்பதால் இந்த மனு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலின் பேரின் தங்க தமிழ்செல்வன் மீது வக்கீல் ஸ்ரீமதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளார்.