8 வழி பசுமைச் சாலை திட்டம் செங்கத்தில் 30 கிராமங்கள் கடும் பாதிப்பு
6/29/2018 5:06:07 PM
திருவண்ணாமலை: சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைக்காக செங்கம் தாலுகாவில் மட்டும் 30 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை ₹10 ஆயிரம் கோடியில் மத்திய அரசு நிதியின் மூலம் அமைக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், உட்பட 5 மாவட்டங்களின் வழியாக இந்த சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை அமைப்பதால் திருவண்ணாமலை மாவட்டம் பெரிய அளவிலான பாதிப்பை சந்திக்க உள்ளது. செங்கம், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யாறு ஆகிய தாலுகாக்களில் 7 ஆயிரம் விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்கள், வீடுகள், பாசன கிணறுகள் கையகப்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
தற்போது செங்கம் தாலுகாவில் மண்மலை, நாச்சிப்பட்டு, முறையாறு, அயோத்தியா பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தும் பணியை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் தொடர்ந்தனர். நேற்று இப்பணியின்போது அதிகாரிகள் பதித்த குறியீடு கற்களை விவசாயிகள் பிடுங்கி போட்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் நிலத்தில் உருண்டு கண்ணீர் விட்டு கதறினர். அதேபோல், கட்டமடுவு கிராமத்தில் நிலம் அளவிடும் பணி நடந்தது. அப்போது, சுமார் 5 ஏக்கரில் செழித்து வளர்ந்திருந்த மாந்தோப்பு மற்றும் வீடு ஆகியவற்றை அளவீடு செய்து கற்கள் பதிக்க அதிகாரிகள் முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், தங்களது நிலத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைத்து, நிலத்தின் நடுவில் உள்ள வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள இரும்பு கேட்டை பூட்டினர்.
இந்த வீட்டையும் மாந்தோப்பையும் விட்டு விடுங்கள் என விவசாயிகள் கண்ணீருடன் கதறினர். தொடர்ந்து பிரச்னை இல்லாத பகுதிகளில் கல் நடுவது என அதிகாரிகள் முடிவு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை வழி சாலைக்காக செங்கம் தாலுகாவில் மட்டும் 30 கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளது. இந்நிலையில், செங்கம் அடுத்த முறையாறு, நாச்சிப்பட்டு பகுதியில் நிலுவையில் உள்ள இடங்களில் இன்று காலையில் நிலங்களை அளவெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். பின்னர் திருப்பாளையம் கிராமத்தில் பணிகளை தொடர முடிவு செய்துள்ளனர். நிலத்தை அளவிடும் பணிகளில் பொதுமக்களின் எதிர்ப்புகளை சமாளிக்க வழக்கம்போல் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவகாசம் வழங்கிவிட்டு அத்துமீறல்
திருவண்ணாமலை மாவட்டத்தில், நிலம் எடுக்க ஆட்சேபணைகள் இருந்தால் ெதரிவிக்க, அடுத்த மாதம் 9ம் தேதி வரை சட்டப்பூர்வமான அவகாசம் இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பாகவே அவசர கோலத்தில், விளை நிலங்களில் போலீஸ் படையுடன் அத்துமீறி நுழைந்து நிலம் அளவீடு செய்வது, குறியீடு கற்களை பதிப்பது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுவது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.