தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அம்பத்தூரில் ரயில் மோதி இளம்பெண் உள்பட 2 பேர் பலி
6/29/2018 5:04:54 PM
ஆவடி: அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பலர் ரயில் பயணிகள். அம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு வந்து மின்சார ரயிலில் பயணிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 9 மணியளவில் ஏராளமான பயணிகள் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதற்காக நடந்து சென்றனர். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, பல பயணிகள் தண்டவாளத்தை கடக்காமல் நின்று விட்டனர். ஆனால் ஒரு ஆண், பெண், ரயிலை கவனிக்காமல் வேகமாக தண்டவாளத்தை கடக்க முயற்சித்தனர். இதை பார்த்த சக பயணிகள் சத்தம் போட்டனர்.
அதற்குள், அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில், இருவர் மீதும் மோதியது. இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து ஆவடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இறந்த பெண், அம்பத்தூர் சித்து ஒரக்கடம் கம்பர் தெருவை சேர்ந்த சேகர் மகள் ஹேமலதா (18) என்பதும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. ஆணின் உடல் சிதறி விட்டதால் அவர் யார் என்பதில் அடையாளம் காண முடிவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.