சாட்சிகளை வளைக்க திலீப் முயற்சி நடிகைக்கு பெரிய கம்பெனியில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது அம்பலம்: நடிகை கடத்தல் வழக்கில் மீண்டும் பரபரப்பு
6/29/2018 5:03:32 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில், தனக்கு எதிராக சாட்சி சொன்ன நடிகைகளுக்கு பெரிய தயாரிப்பு நிறுவனம் மற்றும் முக்கிய நடிகர்களிடம் நடிக்க நடிகர் திலீப் வாய்ப்பு வாங்கி கொடுத்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் சாட்சிகளை அவர் வளைக்கப் பார்த்தது அம்பலமாகி உள்ளது. கேரளாவில் மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சாட்சிகளை கலைக்க கூடாது. விசாரணை அதிகாரி அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் திலீப் தனக்கு எதிராக சாட்சி கூறியவர்களை தன் வசப்படுத்த முயற்சிப்பதாக, போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனிடையே திலீப் தனக்கு எதிராக சாட்சி சொன்ன நடிகைகளுக்கு, முக்கிய நடிகர்கள் மற்றும் பெரிய தயாரிப்பு கம்பெனிகளில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த நடிகைகளின் செல்போன்களை போலீசார் ஒட்டுகேட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இவ்வாறு ஒட்டு கேட்டதில் திலீப்புக்கு எதிராக கூறப்பட்ட புகார்கள் உண்மை என போலீசுக்கு தெரியவந்துள்ளது. எனவே இந்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இது திலீப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்த்ததற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரும் நடிகர் சங்கத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கொச்சியில் நடிகர் சங்க தலைவர் மோகன்லாலின் கொடும்பாவி எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.