மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமர் ஆலய தேரோட்டம்
6/29/2018 5:02:16 PM
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் புகழ்பெற்ற பழமையான ஏரி காத்த ராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரமோற்சவ விழா கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து இக்கோயிலில் நாள்தோறும் பல்வேறு ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள் மற்றும் சேனை முதல்வர், சிம்ம, சூரியபிரபை, கருட சேவை, அனுமந்த உள்ளிட்ட பல்வேறு வாகன புறப்பாடுகள் நடைபெற்று வந்தன. இதில் முக்கிய நிகழ்வான பெரிய தேர் ஊர்வலம் இன்று காலை 10 மணியளவில் துவங்கியது. ேதரடி வீதியில் நன்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ராமர் எழுந்தருளினார். பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, ராமா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மக்கள் வெள்ளத்தில் திருத்தேர் மிதந்து சென்றது.
இத்தேர் துவக்க நிகழ்ச்சியில் மரகதம் குமரவேல் எம்பி, மாவட்ட அதிமுக செயலாளர் ஆறுமுகம், மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி, நகர திமுக செயலாளர் குமார், நகர அதிமுக செயலாளர் ரவி, வழக்கறிஞர் அகோரம், கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், மேலாளர் வீரராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இத்தேர் தேரடி வீதி, மருத்துவமனை சாலை, பஜார் வீதி, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக சென்றது. மாலை 5 மணியளவில் தேர் நிலையை அடையும். தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் அன்னதானம், நீர்மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுராந்தகம் உட்கோட்ட காவல் துறையினர், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.