மாநில, மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து நியமனம் கட்சியை பலப்படுத்தும் பணியில் திவாகரன் தீவிரம்: தினகரன் கடும் அதிர்ச்சி
6/29/2018 5:01:35 PM
திருச்சி: புதிய கட்சியை பலப்படுத்தும் பணியில் திவாகரன் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரனுக்கும், சசிகலா தம்பி திவாகரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியை திவாகரன் துவக்கினார். நானே இந்த கட்சியின் பொது செயலாளர் என்றும் திவாகரன் கூறினார்.
இந்நிலையில் கட்சியை பலப்படுத்தும் விதமாக திவாகரன் அடுத்தடுத்து சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கட்சி துவக்கிய நாள் அன்றே சில மாவட்ட செயலாளர்களும், மாநில நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இப்போது 2ம் கட்டமாக மேலும் சில மாநில, மாவட்ட நிர்வாகிகளை திவாகரன் நியமித்துள்ளார். அதன்படி தலைமை நிலைய செயலாளராக சிவராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக டாக்டர் சரவணன், மாநில செய்தி தொடர்பாளராக விஜயலட்சுமி, மாநில மருத்துவ அணி செயலாளராக டாக்டர் ராஜா வெங்கடேஷ், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக பிரதீப் ராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக விஷ்ணுராம் மற்றும் மதுரை மண்டல செயலாளராக தெய்வேந்திரன், சென்னை மண்டல செயலாளராக சிவசங்கரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 7 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை வடக்கு மார்க்கெட் முத்துராமலிங்கம், மதுரை தெற்கு ராஜபாண்டி, காஞ்சிபுரம் கிழக்கு நாகராஜ், காஞ்சிபுரம் வடக்கு செல்வகுமார், காஞ்சிபுரம் மேற்கு சங்கர், திருவள்ளூர் வடக்கு முத்துராஜ், தென் சென்னை பாலசுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் விநாயக மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தான் சொல்வது எதையும் கேட்காமல் செயல்படும், தினகரனை வழிக்கு கொண்டு வரவே திவாகரன் புதிய கட்சி துவக்கி உள்ளார். அவரது கட்சியின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது என தினகரனின் ஆதரவாளர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அடுத்தடுத்து நிர்வாகிகளை திவாகரன் நியமித்து வருவது தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி திவாகரனுக்கு நெருக்கமான சிலர் கூறுகையில், நாங்கள் கட்சியை முழு வீச்சில் செயல்படுத்த மாட்டோம் என்று தான் தினகரன் நினைத்திருந்தார். அதற்கு மாறாக திவாகரன் செயல்பட்டு வருகிறார். முதலில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவோம். அதுவரை ஆடம்பர பொதுக்கூட்டம், வரவேற்பு, ஆரவாரம் எதுவும் வேண்டாம் என்று கூறி உள்ளார். அதன்படியே எளிமையாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். நிர்வாகிகள் முழுவதும் நியமிக்கப்பட்ட பின், எங்கள் கட்சியின் செயல்பாடு வித்தியாசமாக இருக்கும். தினகரனின் கட்சியை விட, எங்கள் கட்சியை திவாகரன் பலமானதாக மாற்றிக்காட்டுவார் என்றனர்.
மகனை முன்னிலைப்படுத்தும் திவாகரன்
திவாகரன் மகன் ஜெயானந்த், போஸ் மக்கள் பணியகம் என்ற அமைப்பை துவக்கி, மக்கள் நல பணிகளை செய்து வந்தார். தனிக்கட்சி துவங்கியதும், அந்த கட்சியின் மாநில மாணவரணி, இளைஞரணி அமைப்பாளராக மகனை திவாகரன் நியமித்தார். தற்போது மக்களிடம் ஜெயானந்தை பிரபலப்படுத்தும் வகையில், பல விஷயங்களில் அவரை திவாகரன் முன்னிலைப்படுத்தி வருகிறார். மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயிலில் வருடந்தோறும் திவாகரன் தலைமையில் திரட்டுப்பால் ஆராதனை விழா ஊர்வலம் நடைபெறும். சில வாரங்களுக்கு முன் திரட்டுப்பால் ஊர்வலம் ஜெயனாந்த் தலைமையில் நடந்தது. இதேபோல் வழக்கமாக திவாகரன் கலந்து கொள்ளும் கோயில் விழாக்களில் அவருக்கு பதில், ஜெயானந்த் கலந்து கொண்டு வருகிறார். இதுதவிர கட்சியினர் இல்ல திருமணம் உள்ளிட்ட விசேஷங்களிலும் ஜெயானந்த் பங்கேற்று வருகிறார்.