அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் திறந்து கிடக்கும் கிணற்றில் மாசு படிந்த தண்ணீர்: பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்
6/29/2018 5:00:16 PM
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் திறந்தவெளி பொதுக்கிணறு உள்ளது. அதிலுள்ள தண்ணீர் மாசு படிந்து குடிக்க லாயகற்ற நிலையில் இருக்கிறது. அந்த கிணற்றுக்கு மூடி போட்டு பராமரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளபுத்தூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் திறந்தவெளி கிணறு ஒன்று, அங்குள்ள ஏரியில் அமைக்கப்பட்டு உள்ளது. இக்கிணறு திறந்த நிலையில் இருப்பதால், காற்றில் பறந்து வரும் குப்பைகள் விழுந்து தண்ணீர் மாசு படிந்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பறவை கிணற்றுக்குள் இறந்து கிடந்தது.
இதனால் கிணற்று நீர் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அக்கிணற்று நீர் மக்கள் குடிப்பதற்கு லாயகற்ற நிலையில் உள்ளது. இதையடுத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயகுமார் மற்றும் கிராம மக்கள் சிலர், தாமாக முன்வந்து மாசடைந்த தண்ணீரை வெளியேற்றி, கிணற்றில் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தப்படுத்தினர். எனினும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, திறந்த நிலையில் உள்ள பொதுக் கிணற்றை பாதுகாக்க சிமென்ட் தளம் அமைத்து மூடி பராமரிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.