காஞ்சி மாவட்டத்தில் பின்தங்கிய செய்யூர் தாலுகா: மக்கள் வேதனை
6/29/2018 4:59:28 PM
செய்யூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் பின்தங்கிய தாலுகாக்களில் செய்யூர் தாலுகா முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் எவ்வித வசதிகளையும் அனுபவிக்காமல் வலியையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர். கடந்த 1986-ம் ஆண்டு, எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தின்போது மதுராந்தகம் தாலுகாவில் இருந்து பிரிக்கப்பட்டு செய்யூர் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. வங்கக்கடலை ஒட்டியுள்ள செய்யூர் தாலுகாவில் உப்பு தயாரிக்கும் தொழிலும், விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது. செய்யூர் தாலுகாவில் சித்தாமூர் ஒன்றியம், லத்தூர் ஒன்றியம் மற்றும் எடக்கழிநாடு பேரூராட்சி அமைந்துள்ளது. தற்போது மேற்கண்ட 2 ஒன்றியங்களில் 84 ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியில் 24 கிராமங்கள் உள்ளன. கடைசியாக, கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, செய்யூர் தாலுகாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 15 முதல் 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களாக உள்ளனர்.
இவ்வளவு பெரிய மக்கள்தொகை, கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்கள், குக்கிராமங்கள் இருந்தும் காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய தாலுகா என்றால், அது செய்யூர் தாலுகா மட்டும்தான் என அப்பகுதி மக்கள் உறுதியாக கூறுகின்றனர். குறிப்பாக, ஒரு தாலுகா என்றால் குறைந்தபட்ச அடிப்படை வசதியாக அரசு கல்லூரி, படுக்கை அறை வசதியுடன் முறையாக செயல்படக்கூடிய மருத்துவமனை, நீதிமன்றம் உள்ளிட்டவை இருக்க வேண்டும். ஆனால், செய்யூரில் இதுபோன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இந்நிலையில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் வாக்குகளை கொண்ட செய்யூரில் ஒரு கல்லூரிகூட இல்லை. நாங்கள் உயர்படிப்பு படிக்க வேண்டுமென்றால், சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதன் காரணமாகவே ஏழை, அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், தாங்கள் விருப்பப்பட்ட படிப்பை படிக்க முடியாமல், பள்ளி படிப்புடன் முற்றுப்புள்ளி வைத்து கூலிவேலைக்கு செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது.
மேலும், இங்குள்ள ஒரே அரசு பொது மருத்துவமனையும் உரிய மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி, இங்கு வரும் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் படுகாயம் அடைபவர்கள் உட்பட அனைவரையும் மருத்துவ சிகிச்சைகளுக்காக மதுராந்தகத்துக்கோ அல்லது பாண்டிச்சேரிக்கோ அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து தமிழக சட்டமன்றத்தில் தற்போதைய திமுக எம்எல்ஏ பலமுறை கோரிக்கை வைத்தும், இப்பிரச்னையை தீர்ப்பதற்கு தமிழக அரசோ, மாநில சுகாதாரத்துறையோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அனைத்து வகைகளிலும் பின்தங்கிய தாலுகாவில் முதலிடம் வகிக்கும் செய்யூர் தாலுகாவுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை இனியாவது தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் என செய்யூர் மக்கள் வேதனையுடன் வலியுறுத்துகின்றனர்.