மேடவாக்கம் அருகே மாணவியுடன் குடும்பம் நடத்திய வாலிபர் கைது
6/29/2018 4:57:22 PM
வேளச்சேரி: மேடவாக்கம் அருகே 10ம் வகுப்பு மாணவியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. கடந்த ஏப்ரல் 20ம்தேதி கடைத்தெருவுக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. பெற்றோர்கொடுத்த புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், கோவிலம்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த எலெக்ட்ரீசியன் காந்தியும் (23) 10ம் வகுப்பு மாணவியும் காதலித்துள்ளனர். பின்னர் சொந்த ஊரான ஆம்பூர் அழைத்து சென்று மாணவியுடன் குடும்பம் நடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று மாலை போலீசார் ஆம்பூர் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் இருந்த இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்தனர். பிறகு இரு தரப்பு பெற்றோரையும் காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். மாணவி மைனர் பெண் என்பதால் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மைனர் பெண்ணை ஏமாற்றி குடும்பம் நடத்தியதாக காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.