திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகரம் ஆசிரியை வீடு உடைத்து 6 பவுன், வெள்ளி கொள்ளை
6/29/2018 4:55:03 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில் பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். திருவள்ளூர் ராஜாஜிபுரம் கணபதி நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (50). இவர், திருவள்ளூர் வடக்கு ராஜ வீதியில் கடை வைத்துள்ளார். இவரது மனைவி தமிழரசி (45), திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இருவரும் நேற்று காலையில் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பிள்ளைகள், பள்ளிக்கு சென்று விட்டனர். பணி முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்தார் தமிழரசி. அப்போது, வீட்டின் முன்புற கேட் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீசில் தமிழரசி புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தொடர் கொள்ளை சம்பவங்களால் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.