மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கோர்ட்டில் சரணடைந்த பாதிரியார் சிறையிலடைப்பு
6/29/2018 4:45:45 PM
திருச்சி: திருச்சி உறையூரில் சிஎஸ்ஐ நிர்வாகத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவிகள் தங்கி பயிலும் வகையில் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முதல்வராக பாதிரியார் குணஜோதிமணி (60) உள்ளார்.
திருவானைக்காவலை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். அந்த மாணவிக்கு பாதிரியார் குணஜோதிமணி பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கடந்த 16ம் தேதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார். புகாரை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் கடந்த வாரம் வழக்கு தொடர்பாக ஜேஎம் 3 நீதிமன்றத்தில் ஆஜரான மாணவி ரகசிய வாக்குமூலம் அளித்தார். அப்போது ஏராளமான மாணவிகளுக்கு பாதிரியார் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளதாக மாணவி கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி குணஜோதிமணி மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், 26ம் தேதி வரை குணஜோதிமணியை போலீசார் தொந்தரவு செய்ய கூடாது என உத்தரவிட்டனர். காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து நேற்று திருச்சி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் பாதிரியார் குணஜோதிமணி சரணடைந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி என்.குணசேகரன் 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து பாதிரியார் குணஜோதிமணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.