கேரளாவில் 10க்கும் மேற்பட்ட வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடிக்கு விவசாய கடன்: பாதிரியார் கைது
6/20/2018 3:28:28 PM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (66). பாதிரியாரான இவர், அந்த பகுதியில் ‘குட்டநாடு மேம்பாட்டு கழகம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் அந்த பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களுக்கு வங்கியில் இருந்து விவசாய கடன் வாங்கி தருவதாக தாமஸ் கூறியதாக தெரிகிறது.
இதன்படி சிலருக்கு வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதுதவிர ஏராளமானோரின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து ஆலப்புழா பகுதியை சுற்றி உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட வங்கிகளில் கோடிக்கணக்கில் விவசாய கடன் வாங்கி மோசடி செய்துள்ள கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆலப்புழா குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமாரன் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பாதிரியார் தாமஸ், வங்கிகளில் விவசாய கடன் வாங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது. இவருக்கு உடந்தையாக வெளியநாடு பஞ்சாயத்து உறுப்பினர்கள் ரோஜோ ஜோசப், அவரது மனைவி, குற்றநாடு மேம்பாட்டு கழத்தின் கணக்காளர் திரேஷியாமா, நெல் விவசாய அமைப்பு தலைவர் தேவஸ்யா ஆகியோர் இருந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 5 பேர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் 14 வழக்குகள் பதிவு செய்தனர். இதில் பாதிரியரர் தாமஸ் தவிர மற்ற அனைவரும் தலைமறைவாகினர். இதற்கிடையே நேற்று குற்றப்பிரிவு போலீசார் பாதிரியார் தாமசை கைது செய்தனர்.