இளம்பெண்ணை கட்டிப்பிடித்து ‘‘இச்’’: மின் ஊழியருக்கு வலைவீச்சு
6/20/2018 3:27:52 PM
மன்னார்குடி: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மின்வாரிய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கள்ளிக்குடியை சேர்ந்தவர் ஜெயராமன்(42). இவர் மன்னார்குடி டவுன் மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டு பணியாளராக வேலை பார்க்கிறார். நேற்று பிற்பகல் மன்னார்குடியில் உள்ள ஒரு வீட்டுக்கு மின் பயன்பாடு கணக்கெடுக்க சென்றபோது அந்த வீட்டில் 22 வயது இளம்பெண்ணும் அவரது ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் மளிகை கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டுக்குள் சென்று மின் கணக்கெடுத்துவிட்டு கட்டணம் ரூ.520 வந்திருக்கிறது என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
உங்களுக்காக கட்டணத்தை ரூ.100 ஆக குறைத்து அட்டையில் பதிவு செய்து விட்டேன். இனி ஒவ்வொரு முறையும் மின்சார கட்டணத்தை குறைத்தே பதிவு செய்கிறேன் என்று ஜெயராமன் அந்த பெண்ணிடம் கூறியதாக தெரிகிறது. இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென ஜெயராமன் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரை வெளியே விரட்டிவிட்டு கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் செல்போனில் தனது கணவரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார். இதுபற்றி அந்த ெபண்ணின் கணவர் மன்னார்குடி போலீசில் புகார் செய்தார்.
ஜெயராமன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயராமன் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘’ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார். ஏற்கனவே இதுபோல் ஒரு பெண்ணிடம் ஜெயராமன் தகாத முறையில் நடக்க முயன்ற புகாரில் தான், இவர் பேரளத்துக்கு மாறுதலாகி வந்தார் என்று கூறப்படுகிறது.