கள், சாராயக்கடைகள் ஏலம் புதுவையில் நாளை துவக்கம்
6/18/2018 4:04:43 PM
புதுச்சேரி: புதுவையில் கள் மற்றும் சாராயக்கடைகளுக்கான ஏலம் நாளை தொடங்குகிறது. புதுவையில் மொத்தம் 95 சாராயக்கடைகள், 74 கள்ளுக்கடைகள், 450க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் கள், சாராயக்கடைகள் மூலம் அரசுக்கு வரிகள் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. சாராயக்கடைகளுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை பொதுஏலம் விடப்படுவது வழக்கம். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் கடைக்கான மாத கிஸ்தி தொகை 5 சதவீதம் உயர்த்தி கடை உரிமையாளர், உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன்படி இந்தாண்டு சாராயக்கடைகளுக்கான பொது ஏலம் நாளை (செவ்வாய்) தொடங்குகிறது.
முதல் நாளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலுள்ள 86 சாராயக்கடைகளுக்கு ஏலம் விடப்படுகிறது. மறுநாள் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 74 கள்ளுக்கடைகள் ஏலம் விடப்படுகின்றன. காலை 11 மணிக்கு ஏலம் தொடங்கும் நிலையில் இதில் பங்கேற்பவர்கள் அதற்கான வங்கி டெபாசிட், சொத்து பத்திரங்களை வழங்கி வருகின்றனர். மேலும் மின்னணு ஏலத்தில் பங்கேற்கும் சாராயக்கடை உரிமையாளர்களுக்கு ஏலம் தொடர்பாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள சாராயக்கடைகளில் 9 கடைகள் இந்தாண்டு ஏலம் விடப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தவளகுப்பம், மூலகுளம், மணவெளி, மதகடிப்பட்டு, காரைக்கால் பூவம் ஆகிய 5 சாராயக்கடைகளுக்கு மாற்று இடம் கிடைக்காததால் இந்தமுறை இக்கடைகள் ஏலம் விடப்படவில்லை.
இதுதவிர புதுச்சேரி நகராட்சி ஸ்மார்ட் திட்டத்தில் தேர்வாகி உள்ளதால் நகர பகுதியிலுள்ள ஆட்டுப்பட்டி, முத்தியால்பேட்டை, காட்டாமணிக்குப்பம், பொறையூர், திப்புராயப்பேட்டை பகுதியில் உள்ள 5 சாராயக்கடைகளும் மூடப்படுகின்றன. புதுவை மட்டுமின்றி தமிழக பகுதியைச் சேர்ந்த ெதாழிலதிபர்களும் முக்கிய கடைகளை ஏலம் எடுக்க தயாராகி வருகின்றனர்.