உளுந்தூர்பேட்டை அருகே 2 ஆம்னி பஸ்கள் மோதல் 30 பயணிகள் படுகாயம்
6/18/2018 4:03:49 PM
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு ஆம்னி பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து ஒரு தனியார் ஆம்னி பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த பேருந்து இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி என்ற இடத்தில் வந்த போது சாலையின் ஓரம் மேம்பாலம் அமைப்பதற்காக கட்டப்பட்டு வந்த தடுப்பு கட்டையில் மோதியது. அப்போது அதே திசையில் பின்னால் உடன்குடியில் இருந்து வந்த மற்றொரு ஆம்னி பேருந்து அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு பேருந்துகளிலும் வந்த நெல்லை அழகுவேலன்(38), இந்துமதி(34), கவுதமன்(15), ஜோஸ்(32), ஷாலி(29), அருள்(29), சுபலட்சுமி(20), வெங்கடேசன்(49), ராணி(48), ரங்கேஷ்(34), ஜெய்பகவத்(39), செந்தில்அரி (32), முருகன்(30) உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். ஒரு பேருந்து சாலையின் ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தினால் திருச்சிஉளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் 3 கிரேன்கள் மூலம் விபத்துக்குள்ளான பேருந்துகள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.