வேலூர் கோயில் வசந்த விழா அந்தரத்தில் நின்ற கத்தி
6/18/2018 4:03:09 PM
ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை திரவுபதி கோயில் அக்னி வசந்த விழா கடந்த 27ம் தேதி முதல் நடந்து வந்தது. தினமும் பிற்பகல் மகா பாரத சொற்பொழிவும், இரவில் நாடகமும் நடந்தது. நேற்று காலை துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி, விழாவும் நடந்தது. இதில் சிறப்பம்சமாக கடந்த 15ம்தேதி கோயில் கருவறை முன் மண் பானையின் மீது கத்தி அந்தரத்தில் நிறுத்தப்பட்டது. இது நேற்று மாலை வரை 48 மணி நேரம் நின்றது. தீமிதி விழா முடிந்ததும் வழக்கம்போல் கத்தி தானாக கீழே விழுந்தது. அந்தரத்தில் நிறுத்தியிருந்த கத்தியை அனைவரும் தரிசித்தனர். இன்று காலை தருமர் பட்டாபிஷேகம் நடந்தது.
இதுகுறித்து கோயில் அர்ச்சகர் கூறுகையில், திருவிழா முன்னிட்டு அம்மன் காலடியில் கத்தியை வைத்து சிறப்பு பூஜை செய்யப்படும். பின்னர் கோயில் கருவறை முன் மண் பானையின் மீது கத்தியை நேராக நிற்க வைப்போம். இந்த கத்தியானது 48 மணி நேரம் தீ மிதி விழா நடக்கும்வரை அப்படியே நிற்கும். அதன் பின்னர் கத்தி தானாக விழுந்துவிடும். இவ்வாறு கத்தி நிற்கவில்லை என்றால் தீமிதி திருவிழா நடக்க சாத்தியம் இல்லை என்றார்.