நீர்வரத்து 32,421 கனஅடியாக அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5.05 அடி உயர்வு
6/18/2018 4:02:40 PM
மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி, மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், கபினி அணையின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் காவிரியில் கடந்த 14ம் தேதி வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் மாநில எல்லையான பிலிகுண்டுலுவை நேற்று அதிகாலை 12.30 மணியளவில் வந்தடைந்தது.
பின்னர், அங்கிருந்து 3.30 மணிக்கு ஒகேனக்கல் வந்து சேர்ந்தது. மாலை 6 மணியளவில், தமிழககர்நாடக எல்லையான அடிப்பாலாறு பகுதிக்கு நுங்கும் நுரையுமாக வந்த தண்ணீர், இரவு 11 மணியளவில் மேட்டூர் அணையை அடைந்தது. தொடக்கத்தில் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, பின்னர் படிப்படியாக அதிகரித்து 10 ஆயிரம் கனஅடியை எட்டியது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 32,421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறப்பை காட்டிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக 39.96 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 40 அடியாக உயர்ந்தது.
இந்நிலையில் இன்று காலை நீர்மட்டம் 45.05 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5.05 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 14.83 டிஎம்சியாக உள்ளது.
தொடர்ந்து இதேபோல் நீர்வரத்து இருந்தால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூலை இறுதிக்குள் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. ஆனால் வயநாடு பகுதியில் மழை குறைந்ததால், கபினி அணைக்கான நீர்வரத்து சரிய தொடங்கி உள்ளது. இதனால் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும். இதனிடையே கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை தாண்டியுள்ளது. இந்த அணை நிரம்பினால், மேட்டூர் அணைக்கு உபரி நீர் வர வாய்ப்பு உள்ளது. நீர்வரத்து காரணமாக வறண்டு கிடந்த காவிரி கடல்போல் காட்சியளிக்கிறது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்து நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து 10 மணியளவில் 30 ஆயிரம் கனஅடியானது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 23,000 கனஅடியாக சரிந்தது. அதிக தண்ணீர் வரத்தால், கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், அங்குள்ள மெயின் அருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து, அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் 2வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.