ரூ.2 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல்
6/18/2018 3:55:06 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ்பிரபு(62). புதுக்கோட்டையில் மண்டபம், பள்ளி நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமாக அரிசி ஆலையும் உள்ளது. திருவரங்குளம் அருகே உள்ள வேம்பங்குடியில் சொந்த செலவில் அம்மன் கோயிலை கட்டியுள்ள இவர் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். நேற்று வீட்டிலிருந்து காரில் கோயிலுக்கு சென்றார். அப்போது பைக்குகளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 7 பேர் காரை வழிமறித்து தர்மராஜ்பிரபுவை கடத்தி சென்றுவிட்டனர். பின்னர் தர்மராஜ்பிரபுவின் மகனுக்கு போன் செய்து ரூ.2 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அவர் புதுக்கோட்டை டவுன் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். அனைத்து செக் போஸ்ட்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
போலீசார் தேடுவது தெரிந்த மர்ம நபர்கள் இரவு 11 மணி அளவில் தர்மராஜ்பிரபுவை கட்டுமாவடியில் கடற்கரை பகுதியில் விட்டுச்சென்றுவிட்டனர். அவரை டவுன் போலீசார் மீட்டு வந்தனர். இதுகுறித்து ஏடிஎஸ்பி இளங்கோ விசாரித்து வருகிறார். இதில் மர்ம நபர்கள் தர்மராஜ்பிரபுவை கண்களை காட்டி காரில் கடத்தி சென்றதும், போலீசார் தேடுவதை தெரிந்ததும் கட்டுமாவடியில் இறக்கிவிட்டது தெரியவந்தது. மேலும் மர்ம நபர்களில் ஒருவர் தர்மராஜ்பிரபுவிடம் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக கந்தர்வகோட்டை பகுதியில் ஒருவர் சிக்கியதாகவும் தெரிகிறது.