ஆசைக்கு இணங்க மனைவி மறுத்ததால் வெறி குழந்தையை சுவரில் அடித்து கொல்ல முயன்ற தந்தை கைது
6/18/2018 3:54:23 PM
மன்னார்குடி: மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால், குழந்தையின் கால்களைப் பிடித்து துணி துவைப்பது போல் சுவரில் அடித்து மண்டையை உடைத்த குடிகார தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வேங்கைபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(30), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோமதி(25). இவர்களது மகள் அவந்திகா(இரண்டரை வயது) வேல்முருகன் மது பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடிப்பார். வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை. குடிக்க பணம் இல்லாவிட்டால் மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து மனைவியை அடித்து உதைப்பார். நேற்றும் வேலைக்கு செல்லவில்லை.
இன்று அதிகாலை 4 மணி அளவில் வேல்முருகன் , மனைவியை உல்லாசத்துக்கு அழைத்தாராம். இதற்கு கோமதி மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே மேலும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், தூங்கிகொண்டிருந்த குழந்தைஅவந்திகாவின் கால்களை பிடித்து துணி துவைப்பது போல சுவற்றில் அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து உயிருக்கு போராடியது. உடனடியாக குழந்தையை தஞ்சை ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.