8 வழி சாலைக்கு எதிராக சர்ச்சை பேச்சு நடிகர் மன்சூர் அலிகான் சேலம் சிறையில் அடைப்பு
6/18/2018 3:50:53 PM
சேலம்: 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேலம்சென்னை இடையே பசுமை விரைவுச்சாலை அமைக்க மத்திய அரசு ₹10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் சாலை அமைப்பதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், 8 மலைப்பகுதிகள், நீர் வழித்தடங்களில் நிலத்ைத அளவீடு செய்து கையகப்படுத்தும் பணியை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இதனிடையே, இச்சாலைக்கு விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சேலம் குப்பனூர், ஆச்சாங்குட்டபட்டி, நிலவாரப்பட்டி பகுதியில் நில அளவீடுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் முத்துக்குமார், மாரிமுத்து ஆகிய இருவரை சேலம் மாநகர போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 3ம் தேதி நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். அப்போது அவர், சேலம்சென்னை 8 வழி பசுமைச்சாலையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதனை மத்திய, மாநில அரசு கைவிட வேண்டும். மீறி 8 வழி சாலை அமைத்தால், நான் எட்டு பேரையாவது வெட்டுவேன் என ஆவேசமாக கூறினார். இதுதொடர்பாக, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீசார், நடிகர் மன்சூர் அலிகான் பேசிய பேச்சின் வீடியோ, ஆடியோவை கொண்டு விசாரித்து அவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று, தீவட்டிப்பட்டி போலீசார் சென்னை சென்று மன்சூர் அலிகானை அதிரடியாக கைது செய்து, சேலம் அழைத்து வந்தனர்.
பின்னர் அவரை நேற்றிரவு மேட்டூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினர். மன்சூர் அலிகானை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கன்னிகாதேவி உத்தரவிட்டார். இதையடுத்து மன்சூர் அலிகானை சேலம் மத்திய சிறையில் நள்ளிரவு 12.30 மணிக்கு போலீசார் அடைத்தனர். முன்னதாக மன்சூர் அலிகான், செய்தியாளர்களிடம் கூறுகையில், இயற்கை வளங்களையும், விவசாயத்தையும் அழித்து விட்டு அமைக்கப்படும் பசுமை வழிச்சாலையால் எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை. எந்த நிலையிலும் இந்த திட்டம் நிறைவேறக் கூடாது. சிறையில் இருந்து திரும்பி வந்ததும், நான் மக்களை ஒன்று திரட்டி, இதற்காக முழு மூச்சுடன் போராட இருக்கிறேன் என்றார். இதனிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் நபர்களை தொடர்ந்து கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் எடுத்திருப்பதற்கு சமூக ஆர்வலர்களும், பாதிக்கப்படும் விவசாயிகளும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர்.
விவசாயிகள் ஆவேசம்: விவசாயிகள் கூறுகையில், “சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் இருக்கும் நிலையில், புதிதாக பசுமை வழிச்சாலை தேவையில்லை. எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பல சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களை ஒடுக்க தமிழக அரசு, போலீசார் மூலம் கைது நடவடிக்கை எடுக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்று ஆவேசமாக கூறினர்.