வழக்கை வாபஸ் வாங்குவதா? தொடர்ந்து நடத்துவதா? தினகரன் இன்று மாலை முக்கிய முடிவு
6/18/2018 3:49:39 PM
சென்னை: தங்க தமிழ்செல்வனை தொடர்ந்து மற்ற 17 மாஜி எம்.எல்.ஏக்களும் வழக்கை வாபஸ் பெறலாமா அல்லது நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வரும் டிடிவி தினகரன், இன்று மாலை முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் தினகரன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வருக்கு எதிராக கவர்னரிடம் மனுகொடுத்ததால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான தீர்ப்பின் போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பினை கூறினர். இதனால், வழக்கு 3வது நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டது.
மேலும் இந்த தீர்ப்பின் மூலம் அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவாளரும் 18 எம்.எல்.ஏக்களில் ஒருவருமான தங்க தமிழ்செல்வன் தன்னுடைய வழக்கை வாபஸ் பெற்று கொள்ளப்போவதாக அறிவித்தார். இது தினகரன் மற்றும் 17 எம்.எல்.ஏக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல், தங்க தமிழ்செல்வன் எடுத்த முடிவு சரியானது தான் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து தங்க தமிழ்செல்வன் கூறும்போதும் ‘‘நீதிமன்றத்தை நம்ப நான் தயாராக இல்லை. அதனால், நான் என்னுடைய வழக்கை வாபஸ் பெற்று எனது தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று மனு அளிக்க உள்ளேன். இதே போல் 17 எம்.எல்.ஏக்களும் வழக்கை வாபஸ் வேண்டும்‘‘ என்றார். இது கட்சிக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தங்க தமிழ்செல்வன் எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 5க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனிடம் தாங்களும் வழக்கை வாபஸ் பெற இருப்பது குறித்து இன்று கூற இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. எனவே, இன்று இது குறித்த ரகசிய கூட்டத்தை சென்னையில் தினகரன் நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆலோசனையில் தங்க தமிழ்செல்வனை போன்று மற்றவர்களையும் வழக்கினை வாபஸ் பெற்று இடைத்தேர்தலை சந்திக்கலாமா? அல்லது 3வது நீதிபதி அமர்வின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கலாமா? என்பது குறித்து இன்று மாலை தினகரன் தன்னுடைய முடிவை அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை முதல் தனது ஆதரவாளர்களுடன் தினகரன்ஆலோசனை நடத்தி வருகிறார். தங்க தமிழ்செல்வனைத் தவிர மற்ற 17 பேருடனும் அவர் போனில் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவர்களது கருத்துக்களை கேட்டுள்ளார். பின்னர், தனது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதைத் தொடர்ந்து, இன்று மாலை தினகரன் தரப்பில் இருந்து ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.