காஷ்மீரில் ஒருமாதம் நிறுத்தி வைக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் தொடக்கம்
6/18/2018 3:42:46 PM
புதுடெல்லி: காஷ்மீரில் பாதுகாப்பு படைகளை குறிவைத்து தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புனித ரமலான் மாதத்தையொட்டி தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடந்த மாதம் 17ந்தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் ரம்ஜான் பண்டிகை நிறைவடைந்த நிலையில் காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படைகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன. இதுபற்றி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘காஷ்மீரில் தீவிவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளை மத்திய அரசு ரமலான் மாதத்தையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தது.
தற்போது போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. எனவே தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காஷ்மீரில் மீண்டும் தொடங்கிவிட்டன’ என்று கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது: காஷ்மீரில் தீவிரவாதமும், வன்முறையும் இல்லாத நிலையை உருவாக்கிட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே அதை தடுத்து நிறுத்த அனைத்து வித நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியபோதிலும் பாதுகாப்பு படையினர் மிகவும் அமைதி காத்து முன்உதாரணமாகத் திகழ்ந்துள்ளனர். இதை நாடு முழுவதிலும் மக்கள் வரவேற்று உள்ளனர். முஸ்லிம் சகோதர, சகோதரிகளின் வேண்டுகோளை ஏற்று பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டன. அமைதியை விரும்பும் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து தீவிரவாதிகளை தனிமைப் படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.