மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல் டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் ஆதரவை பெற பாஜ முயற்சி
6/18/2018 3:41:03 PM
புதுடெல்லி: மாநிலங்களவை துணை தலைவர் குரியனின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. மாநிலங்களவையில் தற்போது மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே இந்த தோ்தலில் வெற்றி பெற 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜ கூட்டணிக்கு 106 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. இதில் அதிமுகவின் 14 உறுப்பினர்கள் அடங்குவர். எதிர்கட்சிகளுக்கு 117 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கு காங்கிரஸ் அல்லாத வேட்பாளரை களம் இறக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. எதிர்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்க காங்கிரசும் தயாராக உள்ளது.
இந்த தேர்தில் திரிணாமுல் காங்கிரசின் சேகர் ராய், பிஜு ஜனதா தளத்தின் பிரசன்னா ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. பிஜு ஜனதா தளத்துக்கு 9 உறுப்பினர்கள் உள்ளனர். பிஜு ஜனதா தளத்தின் பிரசன்ன எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அவர் வெற்றி பெறுவது உறுதி. அப்படி இல்லாத பட்சத்தில் டிஆர்எஸ் கட்சியின் 6 உறுப்பினர்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரசின் 2 உறுப்பினர்கள் ஆதரவு எதிர்கட்சிகளுக்கு தேவைப்படும். எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை இந்த 2 கட்சிகளும் இதுவரை அறிவிக்கவில்லை.
இவற்றின் ஆதரவை பெற பாஜ முயற்சித்து வருகிறது. இதே போல் எதிர்கட்சிகளும் இவர்களது ஆதரவை பெற காய்களை நகா்த்தி வருகிறது. குடியரசு தலைவா் தேர்தலில் இந்த கட்சிகள் பாஜ வேட்பாளரை ஆதரித்தது. இருப்பினும் குடியரசு துணை தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை பிஜு ஜனதா தளம் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.