மாநிலங்களின் உள்விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது: எதிர்கட்சி முதல்வர்கள் வலியுறுத்தல்
6/18/2018 3:40:19 PM
புதுடெல்லி: நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுவின் 4வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்து வருகிறது. இதில், உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் 15வது நிதி ஆணையத்தின் அறிக்கை குறித்தும், மாநிலங்களுக்கான நிதிப்பங்கீடு குறித்தும் மத்திய அரசிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்கள். மத்தியில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு, கூட்டாட்சி அமைப்பை பலவீனமடையச் செய்கிறது என்று கடுமையாக தாக்கிப் பேசினார்கள்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘இந்த நிதி ஆயோக் மாநிலங்களுக்காக எதையும் செய்யவில்லை. மாநிலங்களின் பிரச்னைகளை எப்போதாவது மத்திய அறிந்து கொள்ள முயற்சித்தது உண்டா? ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி பிரச்னைகள் இருக்கின்றன. மத்திய அரசு கொள்கைகள்தான் வகுக்கின்றன. ஆனால், மாநில அரசுகள்தான் அவற்றை நடைமுறைப்படுத்துகின்றன. மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சி முறையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன், தேவையில்லாமல் மாநிலங்களின் உள்விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது. கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
அதேபோல கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் விவசாய கடன் தள்ளுபடி குறித்த பிரச்னையை மத்திய அரசிடம் எழுப்பினார்கள். கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசுகையில், ‘விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்வதில் மத்திய அரசு 50 சதவீதம் நிதி உதவி அளிக்க வேண்டும். கர்நாடகாவில் 85 லட்சம் விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் நிலுவை இருக்கிறது. கடும் வறட்சி காரணமாக, விவசாயிகளின் வேதனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு 50 சதவீத நிதியை அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.