கறுப்பு பண விவகாரம் போலி நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை
6/18/2018 3:39:23 PM
புதுடெல்லி: மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை இணை அமைச்சர் சவுத்ரி ெசய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் மொத்தம், 11 லட்சம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சில நிறுவனங்கள் கறுப்பு பணத்தை மாற்றுவதற்காக, போலியாக துவங்கப்பட்டு நடத்தப்படுகின்றன. பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபடும் போலி நிறுவனங்களை கண்டுபிடித்து, அவற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதுவரை 2.25 லட்சம் நிறுவனங்கள் செயல்படாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக வருமான கணக்கை தாக்கல் செய்யவில்லை. அவை இயங்குகின்றனவா, இல்லையா என்பது பற்றி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தை அடிப்படையாக வைத்து, அந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும். அரசின் இந்த தீவிர நடவடிக்கையால், பல அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்களின் ஏமாற்று வேலை வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு சவுத்ரி கூறினார்.