எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்
6/18/2018 3:38:42 PM
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நாளை கடைசி நாளாகும். வரும் 28ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் கடந்த 11ம் தேதி தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 23 கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாளை கடைசி நாள் என்பதால், இன்று காலை 8 மணி முதலே கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகள் குவிய தொடங்கினர். நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர்.
இதேபோல், சென்னை மருத்துவ கல்லூரி, ஓமந்தூரர் அரசு மருத்துவ கல்லூரி உள்பட அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்று சென்றனர். இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகள் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க நாளை கடைசி நாளாகும். இந்நிலையில், நேற்று மாலை வரை, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 19,783 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேர 12,826 விண்ணப்பங்களும் சேர்த்து மொத்தம் 36,961 விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்று சென்றுள்ளனர். வரும் 28ம் ேததி தர வரிசை பட்டியல் ெவளியிடப்பட உள்ளது. தொடர்ந்து, ஜூலை 1 முதல் 5 வரை முதற்கட்ட கவுன்சிலங்கும், ஜூலை 16 முதல் 21ம் தேதி வரை 2ம் கட்ட கவுன்சலிங்கும் நடத்த மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.