ஸ்டெர்லைட்டில் கந்தக அமிலம் கசிவால் பீதி ரசாயனம் அகற்றும் பணி தொடங்கியது: தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
6/18/2018 2:38:44 PM
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் கசிந்த கந்தக அமிலத்தை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. இதையொட்டி தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கசிவால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பிப்ரவரி முதல், ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மே 22ம் தேதி நடந்த போராட்டத்தின் போதும், அதற்கு மறுநாளும் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஏப்.9ம் தேதி இந்த ஆலைக்கான சுற்றுச்சூழல் அனுமதியை புதுப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து விட்டது. அதன்பின்னர் ஆலை செயல்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை மே 28ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே கலெக்டர் சந்தீப்நந்தூரி முன்னிலையில் தாசில்தார் ச்ிவகாமசுந்தரி ஆலைக்கு சீல் வைத்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆலை முழுமையாக இயங்காத நிலையில், அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான ரசாயனக் கழிவுகளிலிருந்து நேற்று முன்தினம் கசிவு ஏற்பட்டுள்ளதாக, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆய்வு நடத்த கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டார். அதன்படி சப்கலெக்டர் பிரசாந்த் தலைமையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற் பொறியாளர் லிவிங்ஸ்டன், மாவட்ட துணை தீயணைப்பு அலுவலர் குமரேசன், தாசில்தார் சிவகாமசுந்தரி, டிஎஸ்பி முத்தமிழ், தொழிற்சாலை ஆய்வாளர்கள் ராஜ்குமார், சரவணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். றே்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஆய்வு 6.30 மணி வரை நீடித்தது.
ஆலையில் கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஒரு குடோனில் லேசான கசிவு ஏற்பட்டுள்ளது, கண்டறியப்பட்டது. மற்ற பகுதிகளில் எந்த கசிவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் முடிவுகள் கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கலெக்டர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஸ்டெர்லைட் ஆலை குடோனில் கசிந்த கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக கந்தக அமிலத்தை பாதுகாப்பாக கொண்டு செல்ல ‘டேங்கர் லாரிகள்’ வரவழைக்கப்பட்டிருந்தன. மேலும் கந்தகஅமிலத்தை ஆலை குடோனிலிருந்து அப்புறப்படுத்த, அதை பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்ல ஏற்கனவே இதில் அனுபவம் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மேற்பார்வையில் ஆலை ஊழியர்கள் கந்தக அமிலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணி இன்று மாலை வரையிலும், தேவைப்பட்டால் நாளை காலையிலும் தொடரும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி இன்று கூறுகையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு அமிலத்தை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. கந்தக அமிலத்தை பிரத்தியேகமாக, பாதுகாப்பாக கையாளக்கூடிய லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மாலைக்குள் கந்தக அமிலத்தை வெளியே கொண்டு செல்லும் பணி முடிவடையும் என்று எண்ணுகிறேன். ஆலையில் மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் கந்தக அமிலத்தை அகற்றும் பணியை மேற்கொள்ள முடியாது. எனவே தேவைப்பட்டால் நாளையும் பணி தொடரும்.’’ என்றார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தகஅமிலம் அகற்றும் பணி நடப்பதையொட்டி சிப்காட் மற்றும் தூத்துக்குடி மாநகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நிர்வாகமே பொறுப்பு: கந்தகஅமில கசிவை அகற்றுவதற்கு ஆகும் செலவை ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்திடமிருந்து பெற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு ஆலை நிர்வாகமும் சம்மதித்துள்ளது.