கர்நாடக கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடாது: அமைச்சர் சிவக்குமார் வேண்டுகோள்
6/18/2018 2:37:52 PM
பெங்களூரு: கர்நாடக கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார். கர்நாடகத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பட்ஜெட் தாக்கல் தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் துணை முதல்வர் பரமேஸ்வரை பெங்களூருவில் உள்ள அவருடைய இல்லத்தில் நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து பேசினார். அவர்கள் 2 பேரும் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பின் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
புதிய பட்ஜெட் தாக்கல், பொது செயல் திட்டம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அமல்படுத்துவது, அரசியல் நிலவரம் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது. யாருக்காவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கட்சி கூட்டத்தில் அதை தெரிவித்து அதற்கு தீர்வு கண்டுகொள்ளலாம். விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஏற்கனவே ஆலோசனை நடந்துள்ளது. அரசின் நிதிநிலை அடிப்படையில் கடன் தள்ளுபடி குறித்து முதல்வர் முடிவு எடுப்பார். விவசாயிகளுக்கு உதவும் விஷயத்தில் காங்கிரஸ் எப்போதும் ஆதரவு அளிக்கும். ஊடகங்களும் கூட்டணி அரசுக்கு சிறிது காலஅவகாசம் வழங்க வேண்டும். ஒவ்வொரு கருத்திலும் வேறு அர்த்தத்தை கண்டுபிடிக்க வேண்டாம்.
மாநிலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். நிலைமை அவ்வாறே இருக்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எனக்கு சில அறிவுரைகளை கூறி இருக்கிறார். அதன்படி ஆட்சி நிர்வாகம் நடைபெற வேண்டும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். புதிய பட்ஜெட் தாக்கல் விஷயத்தில் சித்தராமையா எந்த அர்த்தத்தில் கருத்து கூறினார் என்பது தெரியவில்லை. இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.