நாடு முழுவதும் சரக்குகள் தேக்கம் லாரி ஸ்டிரைக் தொடங்கியது
6/18/2018 2:34:45 PM
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காலவயரைற்ற லாரி ஸ்டிரைக் இன்று தொடங்கியது. இதனால், சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் லாரிகள் இன்று ஓடவில்லை. நாடு முழுவதும் 75 லட்சம் சரக்கு போக்குவரத்து லாரிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் லாரிகள் உள்ளன. பொதுமக்களின் அன்றாட தேவையான காய்கறிகள், பழங்கள், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் லாரிகள் மூலம் நகர்வு செய்யப்படுகின்றன.
சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பதால் லாரி வாடகை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். டீசல் விலை உயர்வுக்கேற்ப தங்களின் வாடகை கட்டணம் உயரவில்லை என வலியுறுத்தி வருகின்றனர். எனவே, டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். ஆனால், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்போவதாக அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
இதற்கு தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்வதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் அறிவித்தப்படி, இன்று காலை முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கை தொடங்கினர். இதை தெரியப்படுத்தும் வகையில் தங்கள் லாரிகளில், இன்று முதல் லாரிகள் ஓடாது என்று நோட்டீஸ் ஒட்டிருந்தனர். சென்னை உள்பட நகர் பகுதிகளில் பெரும்பாலான லாரிகள் இன்று இயங்காததால் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உணவு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் ஏற்றிக் கொண்டு 600 லாரிகள் வந்து செல்லும். இதில் இன்று 300க்கும் குறைவான லாரிகளே சென்னை வந்தன. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு இன்று பிற்பகல் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது உணவு பொருட்கள் மற்றும் இதர சரக்கு வாகனங்கள் மட்டும் தான் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ளன. பெட்ரோல், டீசல் லாரிகள் இன்று வழக்கம்போல் இயங்குகிறது. அரசு போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் ஓரிரு நாளில் பெட்ரோல், டீசல் லாரி மற்றும் கன்டெய்னர் லாரி உரிமையாளர்களும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கங்களிடம் ஒற்றுமையில்லாததால் குழப்பம்: அகில இந்திய அளவில் அரசியல் சார்ந்த மற்றும் அரசியல் சார்பற்ற 50க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் உள்ளன. ஆனால் இவர்களிடம் ஒற்றுமையில்லாததால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேதியில் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சங்கங்கள் மற்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சங்கத்தினர் ஜூலை 20ல் தான் ஸ்டிரைக் நடத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், பிற சங்கத்தினர் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் கூறியதாவது: மத்திய அரசின் மக்கள் விரோத போக்கால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதை கண்டித்து பல போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து அகில இந்திய அளவில் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்துகிறோம். தமிழக அளவில் இன்று 3 லட்சம் லாரிகளும், அகில இந்திய அளவில் 40 லட்சம் லாரிகளும் இன்று ஓடவில்லை.
இதனால் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். தற்ேபாது இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் அகில இந்திய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள். கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் திட்டமிட்டப்படி ஸ்டிரைக் நீடிக்கும். இவ்வாறு சுகுமார் கூறினார்.