கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறப்பு
6/14/2018 3:16:36 PM
பெங்களூரு: கர்நாடக மாநில காவிரி டெல்டா பகுதியில் உள்ள கபினி அணை நிரம்பும் நிலைக்கு வந்துள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து கர்நாடகாவில் தொடர்ந்து நல்ல மழை பெய்துவருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர் வரத்து வர தொடங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து 28,383 அடியாக இருக்கிறது.
அணையில் இருந்து 394 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.124.80 உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் காலை நேர நிலவரப்படி 90.80 அடி உயரத்திற்கு நீர் உள்ளது.கடந்த 48 மணி நேரத்தில் கே.ஆர்.எஸ் அணை 8 அடி உயரத்திற்கு நீர்இருப்பு அதிகரித்துள்ளது. மேலும் கபினி அணைக்கு நீர் வரத்து 22,300 கனஅடியாக உள்ளது. கபினி அணையில் இருந்து கால்வாய் மூலமாக 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. 2,284 அடி ( கடல் மட்டத்திலிருந்து ) உயரம் கொண்ட கபினி அணையில் 2,277 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது.கடந்த 48 மணி நேரத்தில் கபினி அணை 9 அடி உயரத்திற்கு நீர்இருப்பு அதிகரித்துள்ளது. கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஏழு அடிகளே உள்ள நிலையில் இன்று காலையில் அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தமிழகத்திற்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இன்று இரவு அல்லது நாளைக்கும் கபினி அணை தனது முழு கொள்ளவை எட்டும் என்று நீர்பாசனதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணை நிறைந்த பிறகு அணைக்கு வரும் மொத்த நீர்வரத்தையும் ஆற்றில் வெளியேற்றபடும், அப்போது தமிழகத்திற்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.