ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி ஏன்?
6/14/2018 2:53:02 PM
கடலூர்: கடலூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருபவர் சவீதா (27). இவரது கணவர் சத்தியசீலன்(35). இவரும் ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். 2 குழந்தைகள் உள்ளன. கடலூர் புதுக்குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சவீதா காவல்துறை வானொலி தகவல் பிரிவில் கடந்த சில நாட்களாக பணியில் இருந்துள்ளார். அவ்வப்போது பிற பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் சவீதா அடிக்கடி வெளியூர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதற்கிடையே குழந்தைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் கடலூரிலேயே பணிஅளிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் கூறிவந்தார். சவீதாவுக்கு உரிய பணி ஒதுக்கீடு கிடைக்காததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
மேலும் பணி விடுப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆயுதப்படையின் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நீதிமன்ற பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு செல்லவில்லை. வீட்டுக்கு சென்ற சவீதா மனஉளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மயங்கிய நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்கொலை முயற்சிக்கு முன்பு அவர் எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது. புதுநகர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பணி சுமை மற்றும் சவீதா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அவரை அசிங்கமாக திட்டிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் கூறுகையில், ஆயுதப்படையில் பெண் போலீசாருக்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான பணிகள் ஒதுக்கப்படும். அது போன்று தான் சவிதாவிற்கும் ஒதுக்கப்பட்டது. கடிதத்தில் எழுதுவது எல்லாம் உண்மையாகுமா? என்றார்.