வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு: மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
6/14/2018 2:48:13 PM
பொன்னேரி: வடசென்னை அனல் மின்நிலையத்தில் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு மற்றும் கன்வேயர் பெல்ட் பழுது காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்படுவது ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் மொத்தம் 2 நிலைகள் உள்ளன. இதில், முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் இரண்டாவது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் இரண்டாவது நிலையில் உள்ள இரண்டாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதேபோல், இரண்டாவது நிலையில் உள்ள முதலாவது அலகில் நேற்று கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின்நிலையத்தில் உள்ள 2 நிலைகளில் இருக்கும் அனைத்து அலகுகளிலும் தொழில்நுட்ப கோளாறு, கொதிகலன் மற்றும் கன்வேயர் பெல்ட் பழுது காரணமாக தொடர்ச்சியாக மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு தடவையும் தரமற்ற உதிரி பாகங்கள் பொருத்தப்படுவதால், மிக விரைவில் பெரும் விபத்து ஏற்படலாம் என மின்நிலைய ஊழியர்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
தற்போது இரண்டாவது நிலையில் உள்ள 2 அலகுகளிலும் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதுகளை துரித கதியில் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இங்கு மிக விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடசென்னை அனல்மின் நிலையத்தின் மொத்த உற்பத்தித் திறனான 1830 மெகாவாட்டில், தற்போது 2 அலகுகளில் ஏற்பட்ட பழுது மற்றும் கோளாறு காரணமாக இன்று 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.