பஸ்சில் நகை பறித்த பெண்ணை சுற்றிவளைத்து பிடித்த பயணிகள்: முத்துப்பேட்டை அருகே பரபரப்பு
6/13/2018 2:59:55 PM
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி ஆனந்தவள்ளி(35). இவர் மகளுடன் நேற்று நாகையில் இருந்து முத்துப்பேட்டைக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது அவரது அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், ஆனந்தவள்ளியின் கைப்பையில் இருந்த பர்சை திருடிக்கொண்டு சங்கேந்தி அருகே பஸ்சில் இருந்து இறங்கினார். தனது கைப்பையில் இருந்த பர்ஸ் காணாமல்போனது கண்டு திடுக்கிட்ட ஆனந்தவள்ளி கூச்சலிட்டார். இதையடுத்து டிரைவர், பஸ்சை நிறுத்தினார். ஒரு சில பயணிகள் விரட்டிச்சென்று பர்சுடன் ஓடிய பெண்ணை பிடித்தனர். பின்னர் அந்த பெண்ணை, எடையூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், விருதுநகர் பாண்டி நகரை சேர்ந்த முருகன் மனைவி வள்ளி(52) என்று தெரியவந்தது. அவர் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டபோது ஆனந்தவள்ளியின் 25 பவுன் நகை மற்றும் பணம் ஆகியவற்றுடன் வேறு நபர்களிடம் திருடிய காலி பர்ஸ்கள், ஆதார் கார்டுகள் மற்றும் தங்க நகைகள் இருந்தது. ஆனந்தவள்ளியின் நகைகளை அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மற்ற நகைகளை பறிமுதல் செய்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.