மத்திய அரசின் பாதுகாப்பில்தான் அதிமுக அரசு ஓடிக்கொண்டிருக்கிறது: டிடிவி.தினகரன் பேட்டி
6/11/2025 2:28:13 PM
முத்துப்பேட்டை: மத்திய அரசின் பாதுகாப்பில்தான் அதிமுக அரசு ஓடிக்கொண்டிருக்கிறது என்று டிடிவி தினகரன் கூறினார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டி.டி.வி.தினகரன் எம்எல்ஏ பேட்டி அளித்தபோது கூறியதாவது: காவிரி பிரச்னைக்காக ஜெயலலிதா பல்வேறு வகையிலும் போராடி உறுதியான நிலையை ஏற்படுத்தி கொடுத்தார். அவரது பெயரை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் இப்போது விசித்திரமான ஒரு ஆட்சி நடந்து வருகிறது. யாருக்கோ இவர்கள் கைகட்டி சேவகம் செய்து வருகிறார்கள் என்பது இங்குள்ள குழந்தைகளுக்கு கூட தெரியும். ஜெயலலிதா ஆட்சியின் போது விதி எண் 110ஐ பயன்படுத்தி பல்வேறு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் தற்போது இல்லை என சொல்லி தட்டிக்கழிப்பதற்கெல்லாம் முதல்வர் விதிஎண் 110ஐ பயன்படுத்துகிறார். மத்திய அரசின் பாதுகாப்பில் இந்த அரசு ஓடிக்கொண்டிருக்கிறது. இவர்களது ஆட்சியில் தொடர முடியாமல் தான் 18 எம்எல்ஏக்களும் வெளியே வந்தனர். இந்த ஆட்சியின் நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் தான் எல்லா போராட்டமும் நடக்கும். அதன் பிறகு மக்களவைத் தேர்தல் வந்துவிடும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் ஆர்.கே.நகர் போலவே மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். வரும் தேர்தலில் 39 இடங்களிலும் வெற்றிப்பெற்று மத்தியில் யார் ஆட்சியமைப்பது என்பதை தமிழகம் தான் தீர்மானிக்கும்.
தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி மூவரும் தகுந்த நேரத்தில் முடிவெடுப்பார்கள். அவர்கள் மூவேந்தர்கள் போல சுதந்திரமாக உள்ளனர். மன்னார்குடியில் புதிய கட்சி உதயம், கொடியேற்றம் குறித்தெல்லாம் எதுவும் சொல்வதிற்கில்லை. இந்த மாதத்தில் கேட்ட சிறந்த ஜோக்குகளில் புதிய கட்சி தகவலும் நல்ல ஜோக் என்பதை தவிர, அந்த கட்சி குறித்து வேறெதுவும் சொல்வதற்கில்லை, திவாகரன் பூமிக்கு அடியில் அதாவது பதுங்கு குகையில் தான் இன்னும் இருந்து வருகிறார். கட்சி பெயரை கேட்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. அண்ணாவிற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அதிமுகவில் அவர் உறுப்பினர் கூட கிடையாது. எப்படி கட்சியினர் அவர் பக்கம் செல்வார்கள்? அவர் என்றும் தனிமரம்தான். இவ்வாறு தினகரன் கூறினார்.