டெல்லியில் ஜனாதிபதி தலைமையில் கவர்னர்கள் மாநாடு இன்று தொடங்கியது: தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு
6/4/2025 3:18:56 PM
புதுடெல்லி: கவர்னர்கள் மாநாடு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள கவர்னர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். முக்கிய பிரச்னைகள், அரசின் திட்டங்கள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படுகிறது. மாநாட்டு தொடக்க நிகழ்வுக்கு பிந்தய 2வது அமர்வில் நிதி ஆயோக் துணைத்தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உரையாற்றினர்.
இதைத்தொடர்ந்து, பிரதமரும், நிதி ஆயோக் தலைவருமான நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து, 3வது அமர்வில் மாநில பல்கலைக்கழகங்களின் உயர்கல்வி, திறன்மேம்பாடு குறித்த விவாதங்கள் நடைபெற்றது. 4வது அமர்வில் ராஜ்யபால் அறிக்கை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கவர்னர்கள் விவாதிக்கின்றனர். இன்றைய மாநாட்டின்போது, தூய்மை இந்தியா, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாநாட்டின் 5வது அமர்வு நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, மகாத்மாவின் 150வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்த விவாதமும், 6வது மற்றும் இறுதி அமர்வில் மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து கவர்னர்கள் அறிக்கை அளிக்கவுள்ளனர்.
மாநாட்டின் இன்றைய தினத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி மற்றும் உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்களும் உரையாற்றுகின்றனர். துணைநிலை ஆளுநர்களுக்கென சிறப்பு அமர்வு ஒன்று நாளை தனியாக நடத்தப்படுகிறது. அதில், யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிகழ்வின்போது அமைச்சரவை செயலர், உள்துறை செயலர், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதுவரை 48 முறை கவர்னர்கள் மாநாடு நடத்தப்பட்டாலும் ஜனாதிபதி தலைமையில் நடக்கும் 2வது மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து பேசியதாக தெரிகிறது. குறிப்பாக, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தது, தற்போது அங்கு நிலவிவரும் சூழல், சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்தது, சட்டம்-ஒழுங்கு குறித்து எடுத்துரைத்ததாக தெரிகிறது. இந்நிலையில், கவர்னர்கள் மாநாடு முடிந்தவுடன் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தோ அல்லது மாநாட்டு கூட்டத்திலோ அவரிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.