மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை: உயரதிகாரிகள் டார்ச்சர்?
6/4/2025 3:15:25 PM
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் மாடியில் இருந்து குதித்தால் காயமடைந்த போலீஸ்காரர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். உயரதிகாரிகள் டார்ச்சர் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் 11வது பட்டாலியன் போலீஸ் முகாம் உள்ளது. இங்கு சுகுமாறன் (27) என்பவர் காவலராக பணியாற்றினார். கடந்த 1ம் தேதி இரவு பட்டாலியன் கட்டிட மாடிக்கு சென்ற சுகுமாறன், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுகுமாறன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டரா அல்லது உயரதிகாரிகள் டார்ச்சரால் தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சுகுமாறன் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.