பீர்பாட்டிலால் குத்தி விவசாயி கொலை
6/4/2025 3:13:29 PM
சோளிங்கர்: வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள மேலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி(49), விவசாயி. இவருக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மேலேரி கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் ராஜிக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியில் ராஜி, டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளார். தினமும் இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் உள்ள பம்புசெட்டில் உள்ள கட்டிலில் ராஜி படுத்து தூங்குவாராம். நேற்றிரவு வழக்கம்போல் விவசாய நிலத்தில் ராஜி கட்டிலில் படுத்து தூங்கினார். இரவு 11.30 மணியளவில் அவ்வழியாக ெசன்ற சிலர், ராஜி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு குடும்பத்தினர் மற்றும் பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது ராஜியின் தொண்டை பகுதியில் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜியை கொலை செய்தவர்கள் யார்? முன்விரோதம் காரணமாக கொன்றார்களா? அல்லது பக்கத்தில் டாஸ்மாக் கடை உள்ளதாலும், ராஜிக்கு மதுஅருந்தும் பழக்கம் உள்ளதாலும் மதுஅருந்தும் தகராறில் யாரேனும் ராஜியை குத்திக்கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜி, மேலேரி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி தலைவரின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.