ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் ெதாழிற்சாலையில் பயங்கர தீ: பல கோடி ரூபாய் பொருட்கள் நாசம்
6/4/2025 3:11:52 PM
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ராம்ஜீ. ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் சாலையில் முறம்பு சோழபுரம் தெற்கு பகுதியில் இவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பை மற்றம் சாக்கு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ெதாழிற்சாலை வளாகத்தில் உற்பத்தியான பிளாஸ்டிக் ெபாருட்களை இருப்பு வைப்பதற்கான குடோன் உள்ளது. குடோன் அருகிலேயே கழிவு பிளாஸ்டிக் பொருட்களை அறை ஒன்றில் குவித்து வைத்துள்ளனர். இன்று காலை 7 மணியளவில் கழிவு பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென தீப்பற்றியது.
அக்கம்பக்கத்தினர் தீயை முயற்சி செய்தனர். ஆனால் பிளாஸ்டிக் கழிவுகள் என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்து, அருகில் உள்ளே குடோனுக்கும் பரவியது. இதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.பல கோடி மதிப்பிலான பிளாஸ்டிக் மற்றும் சாக்குப்பைகள், மூலப்பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.
தகவலறிந்து ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட 9 தீயணைப்பு நிலையங்களிலிருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்தனர். பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கட்டுக்கடங்காத தீயை அணைக்க 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடினர். இதையடுத்து மதுரையில் இருந்து ரசாயன பொருட்களை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கக் கூடிய நவீன தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இருப்பினும் இன்று காலை 11 மணி வரை, தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, ராஜபாளையம் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.