திறப்பு விழாவுக்கு முன்பே விரிசல் விழுந்த தஞ்சை மேம்பாலம் அவசரமாக திறப்பு: திமுக செயலாளர் கைது
6/4/2025 3:09:57 PM
தஞ்சை: தஞ்சை சாந்தபிள்ளை ரயில்வே கேட்டில் புதிய மேம்பாலம் ரூ.52 கோடியில் கட்டப்பட்டது. இந்த பாலத்தை முதல்வர் திறக்க இருந்த நேரத்தில் பாலத்தில் நீண்ட விரிசல் ஏற்பட்டது. திறப்பு விழாவுக்கு முன்னரே விரிசல் ஏற்பட்ட பாலத்தை திறக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் இரவோடு இரவாக வந்து விரிசலில் மண்ணைகொட்டி அதை மூடினர். ஆனாலும் பாலத்தை திறக்க கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பாலம் கட்டியதில் முறைகேடு நடந்து உள்ளது. அதை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். விரிசல் ஏற்பட்ட பாலத்தை திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் பார்வையிட்டனர். இந்த நிலையில் பாலத்தை திறக்க கூடாது என கோர்ட் தடை விதித்தது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீடியோ கான்பரன்சிங் மூலம் தஞ்சை மேம்பாலத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாலம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதி இன்று காலை பூக்காரத்தெரு ராசு முனியாண்டி, ராஜேந்திரன், சசிக்குமார், திமுக நகர துணை செயலாளர் நீலகண்டன், மனோகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாலம் திறப்பு விழா நடந்து கொண்டிருந்தபோது பூக்காரத்தெரு ஜெயக்குமார் உள்பட 5 பேர் விழா நடந்த இடத்துக்கு வந்து ஊழல் பாலத்தை திறக்காதே என கோஷமிட்டனர். ஏற்கனவே அங்கு எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஜெயக்குமார் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். அதன்பிறகு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி திறப்பு விழாவை கொண்டாடினர்.