ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
6/4/2025 3:07:22 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 4 மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து ஊராட்சி மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இதனிடையே, இன்று காலை தெரு குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலை ஒதப்படை பகுதியில் திரண்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து எங்களிடம் பேசினால்தான் மறியலை கைவிடுவோம்” என்றனர். இதையடுத்து, பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் சம்பவ இடம் வந்து கிராம மக்களிடம் பேசினார். அப்போது, “உங்கள் பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. எத்தனை அடிக்கு போர் போட்டாலும் தண்ணீர் இல்லை. எனவே, பக்கத்து கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்க விரைவில் ஏற்பாடு செய்கிறேன். அதுவரை தற்காலிகமாக லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.