தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: ஒரு நபர் கமிஷன் விசாரணை துவக்கம்
6/4/2025 2:48:26 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் கமிஷன் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் இன்று விசாரணையை தொடங்கினார். அவர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்த 13 பேரின் உடல்களில் 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் கோர்ட் உத்தரவுப்படி அந்த 7 பேரின் உடல்களும் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
புதுவை ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அம்பிகாபிரசாத் பத்ரா மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மனோகரன், செல்வகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அண்ணாமலை முன்னிலையில் மறுபிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். இதையடுத்து மாசிலாமணிபுரம் சண்முகம், சாயர்புரம் இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர், சிவந்தாகுளம் கார்த்திக் ஆகியோரது உடல்கள் மே 31ம் தேதியும், சிலோன் காலனி கந்தையா, மாப்பிள்ளையூரணி காளியப்பன் ஆகியோரது உடல்கள் ஜூன் 1ம் தேதியும், குறுக்குச்சாலை ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் உடல் நேற்று முன்தினமும் அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. மினிசகாயபுரத்தைச் சேர்ந்த மாணவி ஸ்நோலினின் உடல் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோர்ட் உத்தரவு வந்த பின்னர் மீதமுள்ள 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், மனித உரிமை எஸ்.பி. சத்தியபிரியா, மனித உரிமை ஆணைய உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழுவினர் தூத்துக்குடியில் நேற்று ஆய்வு நடத்தினர். இவர்களின் அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் மாநில மனித உரிமை ஆணைய தலைவரிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடிக்கு வந்த தேசிய மனித உரிமை ஆணையக்குழுவைச் சேர்ந்த எஸ்.பி விபுல் பிரிட்டோ பிரசாத், டிஎஸ்பிக்கள் ராஜ்வீர்சிங், நிதின்குமார், அருண்தியாகி, இன்ஸ்பெக்டர் லால்பகார் ஆகியோர் நேற்று 2வது நாளாக ஆய்வு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். வருகிற 6ம் தேதி வரை தூத்துக்குடியில் தங்கியிருந்து விசாரணை நடத்தும் இக்குழுவினர் வருகிற 8 அல்லது 9ம் தேதிக்குள் தேசிய மனித உரிமை ஆணையக்குழு தலைவரிடம் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் இன்று காலை தூத்துக்குடி வந்தார். கலெக்டர் அலுவலகம் வந்த அவர் அங்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி, எஸ்.பி., முரளிரம்பா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார். அதன்பின்னர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை அரசு மருத்துவமனையில் சந்தித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிபிசிஐடி எஸ்பியும் விசாரணை
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை நகலை கோவில்பட்டி கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க சிபிசிஐடி எஸ்பி பிரவின்குமார் அபிநவ் இன்று தூத்துக்குடிக்கு வந்தார். அவருடன் மதுரை சிபிசிஐடி ஏடிஎஸ்பி மாரிராஜன் தலைமையில் டிஎஸ்பிக்கள் அனில்குமார், விஜயராகவன், ரமேஷ்பாபு, கலிமுல்லாஷா, சரவணன் ஆகியோரும் வந்தனர். அவர்களும் இன்று தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.