எல்.வி.புரம் கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரிக்கு கடும் எதிர்ப்பு: 4 கிராம மக்கள் முற்றுகையால் பரபரப்பு
6/4/2025 2:45:55 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த எல்.வி.புரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில், அரசு மணல் குவாரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, 4 கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர், குவாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் எல்.வி.புரம் பகுதியில் கொசஸ்தலை ஆறு உள்ளது. இங்கு அரசு மணல் குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் மணல் குவாரி துவங்கியது. அங்கிருந்து லாரிகள் மூலம் மணல் கொண்டு வந்து விற்க வசதியாக பேரம்பாக்கம் பகுதியில் யார்டு அமைத்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள், திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் எஸ்.மகாலிங்கம் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கலெக்டர் சுந்தரவல்லியிடம் மனு கொடுத்தனர்.
அதையும் மீறி இன்று காலை மணல் குவாரியில் இருந்து யார்டுக்கு லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, மணல் குவாரியை மூடக்கோரி திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.மகாலிங்கம், களாம்பாக்கம் பன்னீர்செல்வம், தினகரன், ஜெயபாரதி மற்றும் அனைத்து கட்சியினர், பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர், மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.