ஆர்எஸ்எஸ் விழாவில் பிரணாப் முகர்ஜி பங்கேற்பதில் தவறில்லை: காங். மூத்த தலைவர் கருத்து
6/4/2025 2:42:06 PM
நாக்பூர்: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்பதில் தவறு எதுவும் இல்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். பா.ஜவின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான ‘சங் சிக்ஷா வார்க்’ எனப்படும் பயிற்சி முகாம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 7-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க மூத்த காங்கிரஸ் தலைவராக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி சம்மதம் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கிடையே நாக்பூரில் நிருபர்களை சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சுஷில் குமார் ஷிண்டே இது குறித்து கூறியதாவது:- பிரணாப் முகர்ஜி மதச்சார்பற்றவர். அவர் தான் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் தனது மதச்சார்பின்மை கொள்கைகளையே முன்னிறுத்துவார். ஆர்.எஸ்.எஸ். அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதில் தவறு எதுவும் இல்லை. பிரணாப் முகர்ஜி ஒரு சிறந்த சிந்தனையாளர். அவர் ஆர்.எஸ்.எஸ். மேடைக்கு சென்று பேச இருப்பதே இங்கு முக்கியம். அவரது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை மேம்படுத்துமானால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். இவ்வாறு அவர் கூறினார்.