அமைச்சர்களுக்கு புதிய கார்கள் இல்லை கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு
6/4/2025 2:40:10 PM
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அமைச்சர்களுக்கு புதிய கார்கள் கிடையாது என்றும் முதல்வர் குமாரசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து, ஆட்சியை அமைத்துள்ளது. புதிய முதல்வராக குமாரசாமி கடந்த மே மாதம் 23ந் தேதி பதவி ஏற்றார். மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. மொத்தம் உள்ள 34 அமைச்சர் பதவிகளில் காங்கிரஸ் 22 பதவியும், மதசார்பற்ற ஜனதா தளம் 12 பதவியும் பகிர்ந்து கொண்டுள்ளன. இலாகா ஒதுக்கீடும் பிரச்னை இல்லாமல் முடிந்துள்ளது. வரும் 6ம் தேதி புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.
இந்த நிலையில் முதல்வர் குமாரசாமி அதிகாரிகளின் ஆய்வு கூட்டங்களை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். முதல்வர் நடத்தும் ஆய்வு கூட்டங்களில் அதிகாரிகள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கும்போது அதிகாரிகளின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குமாரசாமி கூறினார். மேலும் கர்நாடக அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்க குமாரசாமி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். பொதுவாக மாநில முதல்வர் தனி விமானம் மற்றும் தனி ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடியும்.
இதற்கு சட்ட விதிமுறைகளில் அனுமதி உண்டு. ஆனால் முதல்வர் உள்பட யாரும் தனி விமானங்களை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்து குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய பதவிக்கு வரும் அமைச்சர்கள் வாரிய தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் யாருக்கும் புதிய கார்கள் வாங்கக்கூடாது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கார்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று குமாரசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.