கதுவா சிறுமி பலாத்கார வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை மேஜராக விசாரிக்க போலீஸ் மனு
6/4/2025 2:38:37 PM
காஷ்மீர்: கதுவா சிறுமி பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை வயது வந்த பெரியவனாக கருதி விசாரிக்க வேண்டும் என மாநில ஐகோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமி கடந்த ஜனவரியில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில், எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஒருவனுக்கு, 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால், அவனை மட்டும், கதுவாவில் உள்ள சிறுவர்களுக்கான ஆணையத்தில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்த சிறுவனின் வயது சான்றிதழில் உண்மைத்தன்மை இல்லை என, போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த சிறுவனின் தந்தை, ஹிரான் நகர் வட்டாட்சியர் அலுவலகத்தில், 2004 ஏப்ரலில், தன் மூன்று பிள்ளைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் வேண்டி, விண்ணப்பம் செய்தார். அதில், முதல் மகன், 1997, நவம்பர், 23ல் பிறந்ததாகவும், இரண்டாவது மகள், 1998, பிப்ரவரி, 21ல் பிறந்ததாகவும், தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூன்றாவது மகன், 2002, அக்டோபர், 23ல் பிறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். முதல் குழந்தை பிறந்து மூன்ற மாத இடைவெளியில் இரண்டாவது குழந்தை பிறந்ததாக கூறப்பட்டு இருப்பதில் இருந்தே, அந்த சான்றிதழில் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாகிறது என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாவது மகன் பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ஹிரான் நகர் மருத்துவமனையில், போலீசார் விசாரித்தனர். 2002, அக்டோபர் 23ல், அந்த சிறுவனின் தாய்க்கு, அங்கு பிரசவம் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. சிறுவனின் வயதை அறிய, மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த சிறுவனின் வயது, 19க்கு மேலும், 23க்கு கீழும் இருக்கும் என, டாக்டர்கள் அறிக்கை அளித்தனர். இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து அவனை, சிறுவர்களுக்கான ஆணையத்தில் விசாரிக்காமல், மற்ற குற்றவாளிகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்’ என, ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு, நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.