சீதை குறித்து சர்ச்சை கருத்து: உ.பி. துணை முதல்வர் மீது வழக்கு
6/4/2025 2:35:41 PM
லக்னோ: சீதையை இழிவுபடுத்தியதாக, உ.பி. துணை முதல்வர், தினேஷ் சர்மா மீது, பீகார் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உ.பி.,யில் பாஜ ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராகவும், தினேஷ் சர்மா, துணை முதல்வராகவும் உள்ளனர். தினேஷ் சர்மா, சமீபத்தில் இந்துக்கள் கடவுளாக வணங்கும் ராமரின் மனைவி சீதா, ‘இந்தியாவின் முதல், டெஸ்ட் டியூப் குழந்தை’ எனக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், பீகார் மாநிலம், சீதாமர்ஹியில், தினேஷ் சர்மாவுக்கு எதிராக, தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சந்தன் குமார் சிங் என்ற வழக்கறிஞர், வழக்கு தொடர்ந்துள்ளார்.
சந்தன் குமார் தாக்கல் செய்த மனுவில், ‘தினேஷ் சர்மா, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார்; நாட்டின் செழிப்பான பாரம்பரியத்தை அவர் இழிவுபடுத்தி உள்ளார். குறிப்பிட்ட ஒரு மதத்தவரை அவமானப்படுத்தும் வகையில், திட்டமிட்டு, சீதை பற்றி, அவதுாறாக கருத்து தெரிவித்துள்ளார்’ என, கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, 8ல் விசாரணைக்கு வருகிறது.