அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் கடைகளை அகற்ற உத்தரவு: உயர்நீதிமன்றம் அதிரடி
6/4/2025 2:25:59 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள இந்து சமய அற நிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் கடைகளை வரும் டிசம்பர் 31 ம் தேதிக்குள் காலி செய்யுமாறு காலக்கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோவில், திருச்சி மலைகோட்டை தாயுமானசுவாமி கோவில் ஆகிய கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். மாற்று இடம் வழங்க வேண்டும் என அந்தந்த கோவில் கடை உரிமையாளர்கள் சார்பில் தனிதனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடை, மற்றும் புது மண்டபம் கடை உரிமையாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடும்போது, தீ விபத்து ஏற்பட்டதற்கு முழு பொறுப்பும் கடை உரிமையாளர்கள் தான் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கூறுகின்றனர். கோவிலில் ஒரே ஒரு எலக்ட்ரீசியன் மட்டும் தான் இருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் தான் பொறுப்பு. புது மண்டபத்தில் உள்ள கடைகள் கோவிலுக்கு எதிரே உள்ளது. கடைகளை காலி செய்ய வேண்டும் என்றால் முறையான நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சட்டபடி எந்த வித நடைமுறைகளையும் பின்பற்றாமல், கடைகளை காலி செய்ய சொல்வது இயற்கை நீதிக்கு எதிரானது.
இதை கேட்ட நீதிபதி, கோவில் வளாகத்தில் விபூதி, குங்குமம், தேங்காய், பழம் விற்கலாம். ஆனால் இங்கு பல்வேறு பொருட்கள் விற்பனை செய்ப்படுகிறது என்றார். இதை தொடர்ந்து மனுதாரர் வழக்கறிஞர்கள் கூறுகையில், கோவிலுக்கு அருகே மாற்று இடம் வழங்கினால், தற்போது உள்ள கடைகளை காலி செய்வதில் எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, பழமையான கோவில்களின் பாதுகாப்பு கருதியும், பக்தர்களின் நலன் கருதியும் கோவில் நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
அதன் பிறகு நீதிபதி பாரதிதாசன், ‘’இதே கோரிக்கையில், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் மற்றொரு உத்தரவு பிறப்பித்தால் குழப்பும் வகையில் அமையும்’’ என கூறிய நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி பாரதிதாசன் இன்று தீர்ப்பளித்தார். அதில், ‘‘தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் உள்ள அனைத்து கடைகளையும் காலி செய்ய வேண்டும். இந்த கடைகளை காலி செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கடை நடத்துபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அவர்களுக்கு காலக்கெடு விடுத்து டிசம்பர் 31ம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும். கடைகளுக்கு மாற்று இடங்கள் வேண்டும் என்று அவர்கள் கோரும்பட்சத்தில் அவர்களது மனுக்களை நான்கு வாரங்களுக்கு பரிசீலித்து தமிழக அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.