10 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்த 67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு அறிவிப்பு
6/4/2025 2:23:07 PM
சென்னை: 10 ஆண்டுகள் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை முன்னதாகவே விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்று வரும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த சூழலில், இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு பிறந்த நாளினை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து வரும் சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய அரசு பரிசீலனை செய்தது. இதன் தொடர்பாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும், நெறிமுறைகள் குறித்த ஆணைகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. மாநில அரசு, 25.02.2025 அன்று 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.